நடிகர் விஜய் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விமர்சனங்களுக்கு பதிலளிப்பாரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று சன் டிவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளாவதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
முந்தைய காலகட்டத்தில் அரசியல் சார்ந்த விஷயங்களை பேசுவதை விட தன்னுடைய ரசிகர்கள் குறித்து தான் விஜய் அதிகமாக பேசியிருக்கிறார். உதாரணமாக,தெறி பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது, ' என்னுடைய ரசிகர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. அடுத்தவர்கள் தொட்ட உயரத்தை உங்களுடைய இலக்காக வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் தொட்ட உயரத்தை அடுத்தவர்களுக்கு இலக்காக வையுங்கள். எல்லோரும் கர்வமே இல்லாமல் வாழ வேண்டும். தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் வெற்றிக்கு ஆயிரம் தோல்விகள் மட்டும்தான் காரணம். எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டே இருங்கள் எனப் பேசினார்.
மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும் போது, இந்த உலகத்தில் அவ்வளவு சுலபமாக நம்மை வாழ விடமாட்டார்கள். நான்கு பக்கத்தில் இருந்தும் அழுத்தம் கொடுப்பார்கள். அதையெல்லாம் நாம் தாண்டி வந்தாக வேண்டும். எல்லோருக்கும் நம்மை பிடித்துப் போய்விட்டால் வாழ்க்கை போரடித்து விடும் என்று பேசினார்.