Header Ads

Breaking News
recent

திருமலையில் பொலிசாருடன் நுகர்வோர் அதிகார சபை திடீர் சுற்றிவளைப்பு


(அப்துல்சலாம் யாசீம்)
அரசாங்கத்தினால் விலைக்குறைப்பு செய்யப்பட்ட பருப்பு மற்றும் டின் மீன் ஆகியவற்றை மக்களுக்கு விற்பனை செய்யாமல் பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவரை இன்று சுற்றிவளைத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக திருகோணமலை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்தார்.

தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குறித்த இடத்திற்கு சென்று பருப்பு மற்றும் டின் மீன் ஆகியவற்றை விலைக்கு வாங்க முற்பட்டபோது குறித்த பொருட்கள் இல்லை என்று வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த வர்த்தகர் உடைய களஞ்சியசாலையை பார்க்க வேண்டும் என்று பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சபை அதிகாரிகள் கோரிக்கை விடுக்க போதிலும் குறித்த வர்த்தகர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் குறித்த களஞ்சியசாலை திறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போது அங்கிருந்த 25 கிலோ கிராம் நிறையுடைய 15 பருப்பு பேக், 24 டின் மீன்கள் அடங்கிய மூன்றரை டின் மீன் பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் தெரிவித்தனர்.

திருகோணமலை - சென்றல் ரோட் கடையொன்றில் பருப்பு ஒரு கிலோ 180 ரூபாய்க்கும் டின் மீன் ஒன்று 230 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை பொலிசாருடன் ஒத்துழைப்புடன் நுகர்வோர் அதிகார சபையும் இணைந்து சுற்றிவளைப்பை முன் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.




Powered by Blogger.