Header Ads

Breaking News
recent

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அபாய எச்சரிக்கை!!!

(அப்துல்சலாம் யாசீம்)
அசுத்தமான உணவுகளில் இருந்து உருவாகும் வயிற்றுப்போக்கு மற்றும் உயிர்கொல்லி நோயான புற்றுநோய் உட்பட 200 நோய்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுகளின் படி அசுத்தமான உணவை உட்கொள்வதால் உலகளாவிய ரீதியில் ஆண்டு ஒன்றுக்கு நான்கு இலட்சம் பேர் உயிரிழக்கின்றமை தெரியவந்துள்ளது.

அத்துடன் அசுத்தமான உணவுகள் காரணமாக உலகளாவிய ரீதியில் சுமார் 600 மில்லியன் மக்கள் நோய்ப் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கூறியுள்ளது.

பல்வேறு உள்ளடக்கங்களை கொண்ட மாசுபடுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் ஆண்டு ஒன்றில் 10 இல் ஒருவர் நோய்வாய்ப்படுவதாகவும் அவர்களில் 40 வீதமானவர்கள் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஆபத்தான விடயம் என்னவொன்றால் நோய்வாய்ப்படும் குழந்தைகளில் 125,000 பேர் ஆண்டு ஒன்றில் உயிரிழக்கின்றனர்.

உணவு தயாரித்தல், பதப்படுத்துதல் மற்றும் விநியோகித்தல் செயற்பாடுகளில் முறையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உலக மக்கள் சனத்தொகையில் கணிசமான பகுதியினர் நோய் வாய்ப்பட்டு மரணிப்பதை தடுக்க முடியும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன் எப்போதும் இல்லாத வகையில் சுகாதார உணவுகளை வழங்குவதில் சவாலை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், கோவிட் 19 போன்ற நோய் தொற்றுக்கள் பரவி வரும் தற்போதைய தருணத்தில் மேலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Powered by Blogger.