Header Ads

Breaking News
recent

ஊரடங்கு தொடர்பாக வெளியான அறிக்கை !!!

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலவரத்தின் அடிப்படையில், விடுமுறையை அறிவிக்கவோ அல்லது ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவோ அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கலுவேவவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

அத்துடன், விடுமுறை தினம் அல்லது ஊரடங்கு சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகிவரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவோர், சமூகத்தில் குழப்பத்தை விளைவிக்கும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றமை தெளிவாகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மூலம், சமூகப் பரவல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்துதல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அவர்களை கொரோனா தொற்றாளர்களாக அடையாளப்படுத்தி வெளியாகும் தகவல்களினால், பல்வேறு நிறுவனங்களை மூட வேண்டிய நிலை உள்ளிட்ட சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, உண்மைக்குப் புறம்பான மற்றும் பிழையாக வழிநடத்தக்கூடிய தகவல்களை பரப்புவதைத் தவிர்த்து, அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதாரத் தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை கடுமையான முறையில் பின்பற்றுமாறு, அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாக, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.