Header Ads

Breaking News
recent

1000 கிலோ கிராம் மஞ்சள் இயந்திர படகு ஒன்றில் கடத்தல்: சந்தேக நபர் தப்பியோட்டம்

 சிலாபம் கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ கிராம் மஞ்சள் இன்று (18) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே இயந்திரப்படகு ஒன்றில் இருந்து குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த மஞ்சள் சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்ட இயந்திரப்படகு சிலாபம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமானது என்பதுடன், படகிலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்களையும், இயந்திரப்படகின் உரிமையாளரையும் கைது செய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள 1000 கிலோ கிராம் மஞ்சளின் பெறுமதி சுமார் 40 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
Powered by Blogger.