மஞ்சள் கடத்தல்:42 வயது நபர் ஒருவர் கைது: மன்னாரில் சம்பவம்
மன்னார் மாவட்ட சாந்திபுரம் பிரதான வீதியில் வைத்து, ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிருஸாந்தன் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் குறித்த மஞ்சள் கட்டிகளை நேற்று (திங்கட்கிழமை) மீட்டுள்ளனர்.
குறித்த மஞ்சள் கட்டிகள், இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு நீர்கொழும்பு பிரதேசத்திற்கு வாகன மொன்றில் கடத்தி செல்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டிகள் ஆயிரத்து 379 கிலோ 960 கிராம் என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மன்னார் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

