அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் சீனாவில் தடுத்துவைப்பு!!!!
எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவர் சீனாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
CGTN என்ற ஆங்கில மொழிமூல செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றும் பெண் ஊடகவியலாளர் செங் லெய் என்பவரே இவ்வாறு 14 நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 14ஆம் திகதிமுதல் எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் அவரை தடுத்துவைத்துள்ளமைக்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.
அத்துடன் இது தொடர்பாக சீனா எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
வர்த்தகம், சினாவின் தொழில்நுட்பம் தொடர்பான பாதுகாப்பு விடயங்கள், கொரோனா தொற்று பரவியமைக்கான முலக்காரணத்தைக் கண்டறிய அவுஸ்திரேலியா ஆரம்பித்துள்ள விசாரணைகள் என்பன இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலையைத் தோற்றுவித்துள்ளது.
இந்த சூழ்நிலையிலேயே அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
செங் கைது செய்யப்பட்ட பின்னர் பொது இடங்களில் அவர் காணப்படவில்லை. எனினும் ஆகஸ்ட் 27ஆம் திகதி அவருடன் பேசியதாக பெய்ஜிங்கிலுள்ள அவுஸ்திரேலிய இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
அவுஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி சேவைக்கு அமைய, அவர் ‘வீட்டுக் காவலில்’ வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நீண்ட காலத்துக்கு தடுத்துவைக்கப்படலாம் என அஞ்சப்படுகின்றது.
செங்கை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துவரும் நிலையில் ‘செங் தொடர்பான எமது கவலை எல்லாம் நேர்மையானதும் உண்மையானதுமாகும்’ என அவுஸ்திரேலியாவின் வர்த்தக, சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டு அமைச்சர் சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்தார்.
சீன அதிகாரிகள் ‘அவரைத் தடுத்துவைத்துள்ளமைக்கான காரணங்களை வெளியிடவேண்டும்’ அல்லது ‘அவரை உடனடியாக விடுவிக்கவேண்டும்’ என ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் 2019 ஜனவரி மாதம் எழுத்தாளர் யெங் ஹெங்ஜுன் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து சீனாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவுஸ்தரேலியாவின் இரண்டாவது உயர்நிலை பிரஜை செங் ஆவார்.
இதனையடுத்து, சீனாவுக்கு பயணித்தால் தன்னிச்சையாக கைதுசெய்யப்படுவீர்கள் என தனது பிரஜைகளுக்கு அவுஸ்திரேலியா இவ் வருட முற்பகுதியில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் சர்வதேச பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் சிஜீடிஎன்னின் பிஸ்னஸ் அண்ட் பிஸ்டோக்ஸ் நிகழ்ச்சிக்காக நேர்காணலில் ஈடுபட்ட செங், தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சீனாவிலுள்ள வெளிநாட்டு ஊடக சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
