Header Ads

Breaking News
recent

நேற்றைய தினம் மாத்திரம் 865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது : முழு விபரம்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய நாளில் மாத்திரம் 865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 153 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களுள் பேலியகொடை மீன் சந்தை பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் நேற்று 535 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மினுவங்கொடை மற்றும் பேலியகொட கொரானா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 217 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் காலி மீன்பிடி துறைமுகத்தில் 05 பேரும் பேருவளை மீன் பிடித்துறைமுகத்தில் 20 பேரும் மேலும் அவர்களுடன் தொடர்புடைய 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவாயிரத்து 682 பேர் தற்போது நாடு முழுவதும் உள்ள 23 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான மூவாயிரத்து 644 பேர் குணமடைந்துள்ளதுடன் 14 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை களுபோவில போதனா வைத்தியசாலைக்கு வேறொரு நோய்க்கு சிகிச்சைப் பெறவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேறு ஒரு நோய்க்கான அறிகுறிகளை கூறிய நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதிய செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து களுபோவில வைத்தியசாலையின் 07 விடுதியில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளர்களை வீடுகளுக்கு அனுப்பியதாக வைத்தியசாலை பணிப்பாளர் அசேல குணவர்த்தன தெரிவித்தார்.

அத்துடன் அவர்கள் வீடுகளில் சுயதனிமிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றாளர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதுடன் குறித்த விடுதியில் பணியாற்றிய 12 ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் நகரில் உள்ள ஐந்து மீன் கடைகள் மூடப்பட்டுள்ளன.

ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவரின் அறிவுறுத்தல்களுக்கமைய, நேற்று முதல் குறித்த கடைகள் மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்

ஹட்டன் பிரதான மீன் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் இருவர், பேலியகொடை மொத்த மீன் விற்பனை நிலையத்தில் மீன் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையிலேயே, பொது மக்களின் பாதுகாப்பு கருதி குறித்த கடைகள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன், பேலியகொடை மீன் சந்தைக்கு சென்ற இரண்டு பேர், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 பேர் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை தியதலாவை மீன் சந்தையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பிரதேச சபையின் தலைவர் கந்தசாமி கண்ணா தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தைக்கு சென்ற தியதலாவை மீன் வர்த்தகர்கள் இருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீன் சந்தையுடன் அமைந்துள்ள கடைத் தொகுதியொன்றை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை மக்களின் நலன் கருதி பண்டாரவளையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் சந்தையின் செயற்பாடுகளை மீள் அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக பண்டாரவளை மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் வர்த்தகர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அர் கூறினார்.

வெல்லவாய,வெலிமடை மற்றும் ஹப்புத்தளை ஆகிய பகுதிகளில் இருந்து அதிகமான வர்த்தகர்கள் பண்டாரவளை ஞாயிறு சந்தைக்கு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகமான நுகர்வோரும் அங்கு பொருட்கொள்வனவிற்கு வருவதால் ஞாயிறு சந்தையை இடைநிறுத்த தீர்மானித்தாக பண்டாரவளை மேயர் குறிப்பிட்டார்.
Powered by Blogger.