மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை ஒருபோதும் முடக்கவில்லை : பிரதமர் தெரிவிப்பு
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை ஒருபோதும் முடக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பேலியகொடை மெனிங் சந்தை வளாகத்தை திறந்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அத்துடன், இக்கட்டான சூழ்நிலைகளின் போதும் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அரசாங்கம் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படாவிட்டால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பார்கள் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பு நகரில் காணப்படும் அதிக வாகன நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையிலே தமது முன்னைய ஆட்சியில் பேலியகொடை மெனிங் சந்தை வளாகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இதன் செயற்பாடுகளை தாமதப்படுத்தி இருக்காவிட்டால் பேலியகொடை மெனிங் சந்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வெகு காலமாகியிருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன், விமான நிலைய அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக அதிவேக நெடுஞ்சாலை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, மத்திய அதிவேக நெடுஞ்சாலை, வடக்கு அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட அதிவேக நெடுஞ்சாலைகள் அனைத்துடனும் பேலியகொடை பிரதேசம் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பேலியகொடை மெனிங் சந்தைக்கான சரக்குப் போக்குவரத்தை இலகுவாக நாடு முழுவதும் மேற்கொள்வதற்கு இது ஒரு மையமாக விளங்கும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.
