புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!!!
20 ஆம் திகதியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழிநுட்ப அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுக்களே இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு உள்ளிட்ட சில அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் பணிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொழிநுட்ப அமைச்சின் கீழ் இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, ஆட்பதிவு திணைக்களம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மை நிறுவனம் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மேலும், நாடயாவிய ரீதியில் அதிவேகத் தரவுகளைப் பரிமாற்றம் செய்யும் தொகுதி மற்றும் அதனைச் சார்ந்த நடமாடும் வலையமைப்புத் தொகுதியொன்றைத் தாபித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் தொழிநுட்ப அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ், பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
