Header Ads

Breaking News
recent

வவு - பட்டானிச்சூர் பாடசாலை முன்பாக ஆரம்பத்தில் ஊர் மக்கள்

வவுனியா, பட்டானிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலய மைதானத்தின் முன்பாக உயரழுத்த மின்சாரத் தூண்களை மின்சார சபை நிறுவ முற்பட்டதால் அப் பகுதியில் மின்சார சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இன்று (05.12) காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. 


இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் ரம்சின், நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் குறித்த இடத்தில் மின்சாரத்தூண் நிறுவ வேண்டாம் எனவும், இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், நகரசபை, மின்சார சபை என்பவற்றுக்கு தாம் அவ்விடத்தில் உயரழுத்த மின்சாரத் தூண்களை நிறுவினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரியப்படுத்தியுள்ளோம். 

இது தொடர்பில் கலந்துரையாடுவதாக மாவட்ட அரசாங்க அதிபரால் எழுத்து மூலம் கடிதமும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பொலிஸ் பாதுகாப்புடன் மின்சாரத் தூண்களை நிறுவுவதை கைவிடுமாறு மின்சார சபையினரிடம் கோரியிருந்தனர். ஆனாலும் மின்சார சபை தொடர்ந்தும் தமது செயற்பாட்டை முன்னெடுத்தமையால் அவ்விடத்தில் திரண்ட பழைய மாணவர்கள், இளைஞர்கள் மின்சாரசபைக்கு எதிராக வவுனியா - மன்னார் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வருகை தந்திருந்ததுடன், பொலிசார் மற்றும் பிரதேச செயலாளர் ந.கமலதாசன் ஆகியோர் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர். 

வவுனியா மின்சார சபையின் பிரதான மின் பொறியிலாளர் மற்றும் பொறியிலாளர் ஆகியோர் வருகை தந்து இவ்விடத்தில் மின்சாரத் தூண் நிறுவப்படாது என உறுதி மொழி வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு ஆகியோர் வவுனியா மின்சாரசபை பொறியிலாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியிருந்தனர். இருப்பினும் தாம் அதற்கு பொறுப்பில்லை எனவும் வடமாகாண மின்சாரசபை தான் இந்த செயற்பாட்டுக்கு பொறுப்பு எனத் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வவுனியா மின்சாரசபை பொறுப்பதிகாரிகள் சமூகமளிக்கவில்லை. 

இதனையடுத்து வடமாகாண மின்சார சபையின் பொறுப்பதிகாரியை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கை தொடர்பில் தெரியப்படுத்தினார். 

இதன்போது வடமாகண மின்சாரசபை பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தொலைபேசியில் உரையாடி வழங்கிய உத்தரவாதத்திற்கு அமைவாக, குறித்த இடத்தில் மின்சாரத் தூண்கள் நிறுவப்படாது எனவும், இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று திங்கள் கிழமை வவுனியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் எனவும், அதில் போராட்டகாரர் சார்பில் பிரதிநிதிகளை கலந்து கொண்டு எங்கு மின்சார தூண்களை அமைப்பது என கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாகவும் மின்சாரத் தூண்களை நிறுவ வந்த அதிகாரியால் வழங்கப்பட்ட கடிதத்தையடுத்தும், பாராளுமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், காதர் மஸ்தான் ஆகியோர் தொலைபேசி மூலம் வழங்கிய உத்தரவாதத்தையடுத்தும் போராட்டம் நிறைவுக்கு வந்தது. 

குறித்த போராட்டம் காரணமாக வவுனியா - மன்னார் பிரதான வீதி போக்குவரத்து 3 மணிநேரம் தடைப்பட்டிருந்தது. 

ஒரு மணிநேரத்திற்கு பின்னர் பொலிசார் மாற்று வழிகள் ஊடாக வாகனங்கள செல்ல அனுமதி வழங்கியிருந்தனர்.

Powered by Blogger.