கொவிட் தொற்றுக்குள்ளான முஸ்லிம் பூதவுடல்களை அடக்கம் செய்வதற்கு இணக்கப்பாடின்றி நிறைவு !!!
கொவிட் தொற்றுக்குள்ளான முஸ்லிம் பூதவுடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதா என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள சுகாதார அமைச்சில் நேற்று (31) கூடிய நிபுணர்கள் குழுக்கள் இரண்டின் உறுப்பினர்களும் எவ்வித இணக்கமும் இன்றி வௌியேறினர்.
அதில் ஒரு குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் நியமிக்கப்பட்ட நிலையில், மற்றைய குழு கொவிட் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவினால் நியமிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சரின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான பூதவுடல்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பு உள்ளிட்ட மேலும் சில முஸ்லிம் அமைப்புகள் இன்று முற்பகல் பொரளை பொது மயான வளாகத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக எதிர்ப்பினை தெரிவிக்க அபே ஜனபல கட்சி கொழும்பு மாவட்ட தலைவர டேன் பிரயசாத் உள்ளிட்ட குழுவினர் குறித்த இடத்திற்கு வந்திருந்தனர்.
பின்னர் குறித்த இடத்திற்கு இரண்டு நீதிமன்ற உத்தரவுகளுடன் வந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என இரு தரப்பினருக்கும் தெரிவித்திருந்தனர்.
