வியாபார நிலையங்களை மூன்று நாளைக்கு மூடுமாறு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர் உத்தரவு !!!
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதியை அண்டிய அனைத்து வியாபார நிலையங்களையும் இன்று செவ்வாய்க்கிழமை (05) முதல் மூன்று நாட்களுக்கு மூடுமாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மக்களின் பாதுகாப்புக்கருதி அவசர ஒன்றுகூடல் ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மக்களின் பாதுகாப்புக்கருதி வியாபார நிலையங்களில் கடையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு சகலரும் ஒத்துழைப்பையும் சுகாதாரத் தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
ஓட்டமாவடி பொதுச்சந்தையினை அண்டியுள்ள மரக்கறி வியாபாரிகள் மாத்திரம் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு மணி வரை வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேரத்தின் பின்னர் சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தலுக்கமைய ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மரக்கறி வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
வியாபார நிலையங்களைத் திறப்பதற்கு மாத்திரம் தடை விதிக்கப்பட்ட நிலையில், பொது மக்கள் நடமாடுவதற்கு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லையென்றும், மக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி தங்களது பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும், இதற்கு வியாபார உரிமையாளர்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறும் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டுள்ள வீதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் தொடருமென அறிவிக்கப்பட்டது.
