வவுனியாவில் கொரோனா அச்சம் காரணமாக விஷேட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று!!!!
வவுனியா மாவட்டத்தில் சடுதியான முறையில் அதிகரித்து வரும் Covid -19 கொரோனா தொற்று காரணமாக அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் பற்றி ஆராயும் விஷேட உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று( 12.01.2021) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சடுதியான முறையில் அதிகரித்த கொரோனா தொற்றினால் இதுவரையில் 120 நபர்கள் தொற்றாளராக சுகாதார பிரிவினரால் அடையாளம் காணப்பட்டதுடன் வவுனியா நகர பகுதியின் பல்வேறு பகுதிகள் சுகாதார திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய முடக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வண்ணம் அத்தியவசிய தேவைகளுக்கான விஷேட பொறிமுறை ஒன்று அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளது
அத்துடன் பொதுமக்களின் நடமாட்டங்களை குறைப்பதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகளை விடுத்து PCR பரிசோதனைகளை துரிதமாக மேற்கொள்வது சம்பந்தமாகவும் முடிவுகள் எட்டப்பட்டதுடன் முப்படை அதிகாரிகளினாலும் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன் வவுனியா நகருக்குள் பிரவேசிக்கும் பகுதிகளான நெளுங்குளம் சந்தி, தாண்டிக்குளம் சந்தி, மாமடுவ சந்தி, பூந்தோட்ட சந்தி, கண்டி வீதி இராணுவ முகாம் ஆகிய இடங்களில் அத்தியவசிய தேவையின்றி நகருக்குள் செல்வதற்கான அனுமதி மறுக்கப்படுவதுடன் அப்பகுதிகளை முடக்குவது (Lockdown) சம்பந்தமாகவும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது.
தனிமைப்படுத்தப்படும் பகுதிகளினூடாக நகருக்குள் பிரவேசிக்கும் தனியார் மற்றும் இ.போ.ச பேரூந்துகள் நகரின் எப்பகுதியிலும் தரித்து நிற்பதற்கு தடை விதிக்கப்படுவதுடன்வைத்தியசாலைக்கு அருகேயுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் மாத்திரம் பேரூந்துகளை நிறுத்த முடியும்.
அத்துடன் தைபொங்கல் தினத்தை கொண்டாடுபவர்கள் தத்தமது வீடுகளில் இருந்து சுகாதார வழிமுறைகளுடன் அத்திருநாளை கொண்டாடுமாறும் அறிவுறுத்துதல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோர் தொடர்பாக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ திரு.குலசிங்கம் திலீபன், மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சமன் பந்துலசேன, மேலதிக அரசாங்க அதிபர் திரு .திரேஷ் குமார்,வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், மாவட்ட சுகாதார பணிப்பாளர் R. மனோகரன் ,மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர். லால் செனவிரத்ண, வன்னி மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரியன்த பெரேரா மற்றும் சர்வமத தலைவர்கள், முப்படை பிரதானிகள், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





