தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்!!!

மீளத் திறக்கப்படும் தனியார் கல்வி நிலையங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படாவிட்டால் அவை அனைத்தும் உடடியாக மூடப்படும் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் எதிர்வரும் 25ம் திகதி திங்கட்கிழமை மீள திறக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
இதன்போது ஆசிரியர்களும், மாணவர்களும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளி என்பவற்றை பேண வேண்டுமென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
அவசியம் ஒரு மீட்டர் சமூக இடைவெளி பேணப்படல் வேண்டுமெனவும், கல்வி நிலையத்தின் அளவைப் பொறுத்து மாணவர்களை அனுமதிக்க வேண்டுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அடிக்கடி கை கழுவி, மலசல கூடங்களை துப்பரவாக வைத்திருப்பதோடு, போதியளவு நீர் மற்றும் சவர்க்காரம் என்பன வைக்கப்படல் வேண்டுமெனவும், அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சுகாதாரப் பகுதியினர் கல்வி நிலையங்களுக்கு திடீர் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதுடன், கல்வி நிலையத்தின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத தனியார் கல்வி நிலையங்கள் மூடப்படுமெனவும், அதன் உரிமையாளர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் குறிப்பிட்டுள்ளார்.