Header Ads

Breaking News
recent

சந்தையை திறக்க அனுமதிக்காமையால் வீதியை மறித்து போராட்டம்.


வவுனியா மொத்த மரக்கறி வியாபாரசந்தையை பொலிசார் திறக்க விடாமையினால் வீதியை வழிமறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வாக்குறுதி வழங்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

கொரோனா தாக்கம் காரணமாக ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வவுனியா தினச்சந்தை கடந்த சிலநாட்களாக மூடப்பட்டிருந்ததுடன், காமினி மகாவித்தியாலயம் மற்றும் கண்டி வீதியில் அமைந்துள்ள பொருளாதார மத்தியநிலையத்தில் தற்காலிகமாக செயற்பட்டு வந்தது.

இதேவேளை சந்தையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் அன்ரியன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் அவர்களில் எவருக்கும் தொற்று அடையாளம் காணப்படவில்லை.

இதேவேளை மீண்டும் சந்தையை திறப்பதற்கு சுகாதார பிரிவினர் அனுமதி வழங்கியிருந்ததுடன் நகரசபையின் ஏற்பாட்டில் நேற்றையதினம் தினச்சந்தை தொற்று நீக்கமும் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (06) அதிகாலை சந்தையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தநிலையில் பொலிசார் அவர்களை திறப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் பொலிசாருக்கும் அவர்களிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

நீண்ட நேரமாகியும் தீர்வு கிடைக்காமையால் ஹொறவபொத்தானை பிரதான வீதியை வழிமறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்த வீதியுடனான போராட்டம் இடைநிறுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் பிரதிபொலிஸ்மா அதிபர் லால்செனவிரத்தின ஆகியோர் அவர்களுடன் கலந்துரையாடினர். ஏனைய சில ஊழியருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளை விரைவாக செய்துவிட்டு எதிர்வரும் திங்கள்கிழமை முதல் சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளிற்கமைய போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திறக்க விடு திறக்க விடு சந்தையினை திறக்க விடு , வாழ விடு வாழ விடு விவசாயிகளை வாழ விடு , விவசாயத்தினை வைத்து சுயலாபம் காணதே , சந்தையினை மட்டும் திறக்க விடாதது ஏன்? , வேண்டும் , சுகாதார பிரிவினர் பரிசோதனை செய்தும் திறக்க விடாதது ஏன் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.

போராட்ட இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் , செல்வம் அடைக்கலநாதன் , குலசிங்கம் திலீபன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் வருகைதந்து போராட்டத்திலிருந்தவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

Powered by Blogger.