திருகோணமலையில் உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனா தொற்று உறுதி!!!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வயோதிபர் நேற்று (14) உயிரிழந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கம்பஹா பகுதியிலிருந்து கோமரங்கடவல-திறப்பன பிரதேசத்திற்கு வருகை தந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 86 வயது உடையவர் எனவும் அவருடைய சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வயோதிபருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர் உட்பட ஊழியர்களையும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த உள்ளதாகவும் திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் தொடர்ந்தும் திருகோணமலை மாவட்டத்தில் ஆன்டிஜென் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.