காசாவில் இருந்து வரும் ராக்கெட் தாக்குதல்களுக்கு தாங்கள் வலிமையான பதிலடி : இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல்-பாலத்தீனம் இடையிலான மோதல் ஏழாவது நாளாக தொடரும் நிலையில் காசாவில் இருந்து வரும் ராக்கெட் தாக்குதல்களுக்கு தாங்கள் வலிமையான பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று காசாவில் இஸ்ரேல் படைகளால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் குறைந்தது மூன்று பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹமாஸ் ஆயுதக் குழுவினரும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக தடுப்பு அரண்கள் சென்று தப்பிக்க வேண்டிய சூழல் அந்நகர மக்களுக்கு உண்டானது. தொடர்ந்து பதற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று சர்வதேச சமூகம் இருதரப்பையும் வலியுறுத்தி வருகிறது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலத்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோரை சனிக்கிழமையன்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் - பாலத்தீன விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதிக்க உள்ளது.
சென்ற திங்கட்கிழமை (மே 10ஆம் தேதி) இஸ்ரேல் - பாலத்தீன மோதல் தொடங்கியதிலிருந்து காசாவில் இதுவரை குறைந்தது 148 பேர் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தங்கள் தரப்பில், இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவிக்கிறது.
தாங்கள் நடத்திய தாக்குதலில் காசாவில் டஜன் கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேல் தாக்குதலால் தங்கள் தரப்பில் உயிரிழந்தவர்களில் 41 குழந்தைகளும் அடக்கம் என்று பாலத்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு காலம் காசா மீதான தாக்குதல்கள் தொடரும் என்று சனிக்கிழமையன்று தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தங்களின் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்க சாத்தியமான அனைத்தையும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் நடந்த மோதல்கள் கடந்த ஆறு நாட்களாக நடந்த வன்முறைச் சம்பவங்களின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியிலிருந்து இஸ்ரேல் படைகள் விலக வேண்டும் என்று எச்சரித்து இஸ்ரேல் பகுதியின் மீது காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் தொடங்கியது ஹமாஸ் அமைப்பு. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான் தாக்குதல்கள் நடத்தத் தொடங்கியது.