கிழக்கில் 141 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

கடந்த 24 மணித்தியாலயங்களில் கிழக்கு மாகாணத்தில் 141 பேர் கொரோனா தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையை கொவிட் 19 தனிமைப்படுத்தும் சிகிச்சை நிலையமாக மாற்றியமைத்து திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (21) கல்முனை பிராந்திய சுகாதார ஆயுர்வேத இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம் அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் கலந்து கொண்டு திறந்து வைத்த பின்னர் மாகாணத்தில் கொவிட் 19 தொற்று தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப் பிரிவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது. இவ்விடயம் பாரிய விளைவை உண்டு பண்ணலாம். மிக அவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டி ஏற்பட்டால் முகக் கவசம் அணிந்து செல்லமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இன்று திறந்து வைக்கப்பட்ட தனிமைப்படுத்தும் சிகிச்சை நிலையங்களான அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் 100பேரும் அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலை 50பேரும் தங்கி கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன் உள்ளிட்ட வைத்தியர்கள், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என பலரும் கலந்து கொண்டனர்.

