Header Ads

Breaking News
recent

பேராசிரியை ஹின்த் ஷிப்லி மரணம்



தப்ஸீர் துறைப் பேராசிரியரும் அல்குர்ஆனியக் கலை ஆய்வாளருமான பேராசிரியை ஹின்த் ஷிப்லி கடந்த 24 ஆம் திகதி வபாத்தானார்.

டியூனிசீயாவைச் சேர்ந்த பேராசிரியை ஹின்த் இளவயதிலே அல்குர்ஆனை மனனம் செய்தார். உஸூலுத்தீன் பீடத்தில் தனது கலாநிதிக் கற்கையை நிறைவு செய்துள்ளார். டியூனீசியாவின் ஸைத்தூனா பல்கலைக்கழகத்தில் அல்குர்ஆனிய கலை பேராசிரியராக கடமையாற்றியிருக்கிறார்.

பல்வேறு முக்கிய நூல்களை எழுதியுள்ள அவரின் நூல்களில் “கோட்பாடுகளுக்கும் பிரயோகத்திற்கும் இடையில் அல்குர்ஆனுக்கான விஞ்ஞான விளக்கம்” என்ற நூல் மிகவும் பிரசித்தி பெற்றது.

எழுத்தாளராகவும் ஆய்வாளராகவும் என அறிவுத்துறையில் பங்காற்றிய அவர் தைரியமும் துணிச்சலும் சாமர்த்தியமுமிக்கவராக விளங்கினார்.

1975 ஆம் ஆண்டு அப்போதைய டியூனீசிய ஜனாதிபதி பூர்கிபா கலந்து கொண்ட சர்வதேச பெண்கள் வருட நிகழ்வொன்றில் பங்குபற்றி “இஸ்லாத்தில் பெண்களின் அந்தஸ்த்து” எனும் தலைப்பில் உரையாற்றினார். அவ்வேளை பூர்கிபாவை முன்னால் வைத்துக் கொண்டு அவரது கொள்கைகள் அல்குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் எதிரானது என விமர்சித்தார்.

1981 இல் அரச நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு பூர்கிபா தடை விதித்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஸஃப்ஸாரி எனப்படும் டியூனிசியாவின் பாரம்பரிய உடையை அதற்கு மாற்றீடாக அணியத் துவங்கினார். இதன் காரணமாக 'சீருடையின் சொந்தக்காரி' என்ற பெயரால் அழைக்கப்பட்டார். தலையிலிருந்து கரண்டைக்கால் வரை உடம்பை மறைக்கும் வெந்நிற போர்வையே ஸஃப்ஸாரி ஆகும்.

அறிவுப் புலத்தில் குறிப்பிடச் சொல்லத்தக்க பங்களிப்பை அவர் ஆற்றிய போதிலும் ஊடகங்களால் அவர் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அல்லாஹ_ தஆலா அன்னாரது உயர்ந்த பணிகளை ஏற்றுக் கொண்டு அவரது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனபதியை வழங்கட்டும்!
Powered by Blogger.