Header Ads

Breaking News
recent

காட்டுப் பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் எலும்புத் துண்டுகள் கண்டுபிடிப்பு...



களுத்துறை மாவட்டத்தின் வரகாகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பலிகந்த பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று மதியம் நபர் ஒருவர் குறித்த காட்டுப் பகுதிக்கு சென்றிருந்த போது குறித்த எலும்புத் துண்டுகளை கண்டு வரகாகொட பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த நபரினது என சந்தேகிக்கப்படும் எலும்புத் துண்டுகள் பிரதேசத்தின் பல இடங்களில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த நபரினது என சந்தேகிக்கப்படும் உள்ளாடை ஒன்றும் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு வந்த மத்துகம பதில் நீதவான் டி.வி.விஜேசேன நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, புளத்சிங்கள மஹகம பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் புளத்சிங்கள தியகடுவ கல்லஸ்பஹல பிரதேசத்தில் அமைந்துள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி இருந்த போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பின்னர் குறித்த நபர் கடந்த 09 ஆம் திகதியில் முதல் காணாமல் போயுள்ளார்.

இதுவரை குறித்த நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பில் உறவினர்கள் அங்கலவத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் காணாமல் போன நபரின் உறவினர்கள் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

பொலிஸார் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ள நிலையில், காட்டில் கண்டு பிடிக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் காணாமல் போன நபரினதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

கண்டு பிடிக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் மற்றும் உள்ளாடையை ஹொரணை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வரகாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Powered by Blogger.