பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்....

பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் பொறுப்பற்ற செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. 14,000 பேருக்கு பிசிஆர் செய்து அதில் 2,000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு 39 பேர் மரணிக்கும் நிலையில் நாட்டை திறந்து விட்டு இலங்கையில் வாழும் மக்கள் தொடர்பில் அக்கரையீனமாக செயற்படுவதை வன்மையாக கண்டிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலில் மட்டக்களப்பு போரதீவுப்பற்று இளைஞர் கழக சம்மேளத்தின் ஏற்பாட்டில் இன்று (28) காலை மாபெரும் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்திக்கும் வகையில் இந்த இரத்த தான முகாம் நடாத்தப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாம் ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.ராகுல நாயகி இளைஞர் கழக உத்தியோகஸ்தர் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
இந்த இரத்த தான முகாமை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார் அதனை தொடர்ந்து பெருமளவான இளைஞர்கள் இரத்தம் வழங்கி வருகின்றனர்.
இந்த நிகழ்வுக்கு இலண்டன் அகிலன் பவுண்டேசன் ஊடாக இலங்கைக்கான அகிலன் பவுன்டேசன் இணைப்பாளரும் போரதீவுப்பற்று முன்னாள் பிரதேச சபை தவிசாளருமான வீ.ஆர்.மகேந்திரன் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், கடந்த சில தினங்களாக இலங்கையில் பீசிஆர் எடுக்கும் வீதத்தினை அரசாங்கம் குறைத்துள்ள போதிலும் தொற்றாளர்களின் தொகையும், இறப்பும் அதிகமாகவே இருந்து வருகின்றது. இதன் காரணமாக பொது மக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். என்றார்.