Header Ads

Breaking News
recent

வாரத்தில் 2 நாட்கள் வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு வருகை : சிரமப்படும் நோயாளிகள்....


(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திரியாய் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் இன்மையினால் நோயாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்திலிருந்து 45 கிலோமீட்டருக்கு வடக்கு நோக்கி அமைந்திருக்கும் இக்கிராமத்தில் 1990ஆம் ஆண்டு இடம் பெயர்வுக்கு முன்னர் வைத்தியசாலை இருந்ததாகவும், அதேநேரம் வைத்தியசாலையை பயன்படுத்தி வந்ததாகவும் சிறு நோய்கள் ஏற்பட்டாலும் மருந்துகளை வைத்தியசாலையில் பெற்று வந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

இருந்த போதிலும் கடந்த 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டதையடுத்து 2004ஆம் ஆண்டு திருகோணமலை- புல்மோட்டை பிரதான வீதி திரியாய் சாந்தியில் வைத்தியசாலை நிர்மானிக்கப்பட்டு வந்ததாகவும் இந்த வைத்தியசாலை கல்லறாவ, புடவைக் கட்டு மதுரங்குடா மற்றும் கல்லம்பத்தை மக்கள் பயன்படுத்தும் விதத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனாலும் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டிருந்த போதிலும் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனாலும் கிழமையில் 2 நாட்கள் வைத்தியர்கள் இவ் வைத்தியசாலைக்கு வருவதாக தெரிவித்திருந்த போதிலும் உரிய நேரத்தில் இவர்கள் வருகை தராத பட்சத்தில் மீண்டும் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வருகைதந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி செல்ல வேண்டிய ஷ நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

திரியாய் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் நியமிக்கப்படாமையினால் 15 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள குச்சவெளி வைத்தியசாலைக்கும், இல்லாவிட்டால் 12 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள புல்மோட்டை வைத்திய சாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Powered by Blogger.