Header Ads

Breaking News
recent

ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்புரிந்த இளம் வயது சிறுமி, தீக்காயங்களுக்கு உள்ளானது எப்படி?


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான சிறுமியொருவர், தீக்காயங்களுக்கு உள்ளாகிய சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதாரணபத்திரண, இதனைக் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பிலான ஆரம்பகட்ட தகவல்களை தமது அதிகாரிகள் திரட்டி வருவதாகவும், அதன் பின்னரே முழுமையான தகவல்களை வெளியிட முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.

தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன், தீக்காயங்கள் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஹட்டன் – அக்கரபத்தனை – டயகம பகுதியைச் சேர்ந்த வயது சிறுமியொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வறுமை காரணமாக தனது கல்வியை 7ம் தரத்துடன் இந்த சிறுமி நிறுத்திக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

6 சகோதரர்களை கொண்ட குடும்பத்தில், மூன்றாவது பிள்ளையாக இந்த சிறுமி பிறந்துள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக இடைதரகர் ஒருவரின் ஊடாக, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு பணிக்காக இந்த சிறுமி அமர்த்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் பிரபல சிங்கள ஊடகமொன்றுக்கு கூறியுள்ளனர்.

மாதாந்தம் சம்பள பணத்தை வீட்டிற்கு அனுப்பிய போதிலும், சிறுமியை பார்வையிட ஒரு முறையேனும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

எனினும், தொலைபேசியூடாக இடைக்கிடை பேசுவதற்கான சந்தர்ப்பம் மாத்திரம் உறவினர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணியாற்றும் சாரதியொருவர் தன்மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக, தொலைபேசியில் உரையாடிய போது, குறித்த சிறுமி தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

நுளம்பு சுருள் ஒன்றை பற்ற வைக்க முயற்சித்த போது, ஏற்பட்ட தீயினாலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களிடம், வீட்டின் உரிமையாளர்கள் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.

எனினும், தாம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது, தீ பரவியமைக்கான எந்தவொரு தடயங்களும் கிடைக்கவில்லை என உறவினர்களை மேற்கோள்காட்டி, சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, சிறுமியின் உடலில் 70 வீதமான பகுதியில் தீ காயங்கள் காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதாரணபத்திரணவிடம் வினவியது.

சிறுமியின் வயதை கண்டறிவதற்கான ஆவணங்களை தாம் சேகரித்து வருவதாகவும், விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Powered by Blogger.