தம்பலகாம வயல்வெளியில் வாயில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் யானை...

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்பொத்தவெவ வயல் பகுதியில் காட்டு யானையொன்று வாயில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் வீழ்ந்து கிடப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மாடு மேய்ப்பதற்காக இன்று (25) ஞாயிற்றுக்கிழமை சென்ற ஒருவர் வழங்கிய தகவலையடுத்து தம்பலகாம பொலிசார் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்திய நிலையில் உடனடியாக குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு யானைக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தர்மபாலகம பொலிசார் தெரிவித்தனர்
மேலும் தற்போது தம்பலகாமம் பிரதேசத்தில் மாத்திரமல்லாது திருகோணமலை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்ற நிலையில் விவசாயிகள் யானையை பயமுறுத்துவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்தபோதிலும் இந்த யானையின் வாயில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஹக்கபட்டஸ் என்றழைக்கப்படும் வாய் வெடியை உண்டிருக்கலாம் எனவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் max தமிழ் செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இருப்பினும் குறித்து யானைக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


