திருகோணமலையில் ஆயுததாரிகளினால் வெள்ளை வேனில் கணவரை கடத்தியதாக மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...
கொழும்பில் விமானப்படை தளபதியும் அமைச்சர் சமல் ராஜபக்சவும் சிகிச்சை பெற்று வந்த நாரஹேன்பிட்ட தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்றாவது நபராக திருகோணமலையில் இன்று (28) காலை மேலும் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை உப்புவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதய நகர் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரின் மனைவி இன்று காலை திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தனது கணவரை வெள்ளை வேனில் வந்த ஆயுததாரிகள் கடத்திச் சென்றதாக முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொது கொழும்பு நாரஹேன்பிட்ட தனியார் மருத்துவமனையில் கைக்குண்டு வைத்திருந்தமை தொடர்பில் இன்று அதிகாலை தனது கணவரை வெள்ளை வேனில் வந்த ஆயுததாரிகள் அழைத்து சென்றதாகவும் தனது கணவரை விடுவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.