திருமலையில் தடைசெய்யப்பட்ட ஹக்கபடஸ்களுடன் நபரொருவர் கைது...
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் வாய்க்கால் பகுதியில் ஹக்கபடஸ் என்றழைக்கப்படும் 16 வாய் வெடிகளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
மொரவெவ பிரதேசத்தில் அண்மைக்காலமாக யானைகள் உயிரிழந்து வருவதுடன் மிருகங்களை வேட்டையாடும் வீதம் அதிகரித்து வருவதாக பொலிசாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மொரவெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த சந்ரலால் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பன்குளம் பிரதேசத்தில் சில இடங்களில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் குறித்த பகுதியால் சென்ற சந்தேகநபர் ஒருவரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 16 வாய் வெடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் 35 வயது உடையவர் எனவும் குறித்த நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.