திருமலையில் புதையல் தோண்டிய எட்டு பேர் கைது....
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கதிரவெளி இராணுவ புலனாய்வுத்துறை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வாகரை விஷேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக வெருகல் மாவடிச்சேனை பகுதியில் அமைந்துள்ள வீட்டில் தோண்டிக் கொண்டிருந்த போது 08 சந்தேக நபர்களை கைது செய்து ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக வாகரை விசேட பொலிஸ் அதிரடிப்படையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாவலப்பிட்டி,தோப்பூர், ஈச்சிலம்பற்று, திருகோணமலை, வெருகல், தம்பலகாமம்,போன்ற பகுதிகளைச் சேர்ந்த 31 வயதிற்கும் 55 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்களுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய மண்வெட்டி 02 சவல் 02 அலவாங்கு 02 கூறான இரும்பு கம்பி 02 மற்றும் மோட்டார் சைக்கிள்கள் 03 கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரை விசேட பொலிஸ் அதிரடி படையினர் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.