திருகோணமலை, பன்குளத்தில் உயிருக்குப் போராடும் யானை-கவனிப்பார்களா உரிய அதிகாரிகள்
(பதுர்தீன் சியானா)
திருகோணமலை- பன்குளம் பகுதியில் யானையொன்று கடந்த 7ஆம் திகதி முதல் வாய்க்காலில் வீழ்ந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றது.
பன்குளம் பகுதியில் உள்ள பிரபல சட்டத்தரணியொருவரின் தனியார் காணியொன்றில் கடந்த 7ஆம் திகதி 9 அடி உயரமான 35 வயது மதிக்கத்தக்க யானையொன்று காலில் காயம் ஏற்பட்ட நிலையில் வாய்க்காலுக்குள் கிடந்தது.
இந்நிலையில் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் குறித்த யானைக்கு சிகிச்சை அளித்த போது விழுந்து கிடந்த இடத்தில் இருந்து வாய்க்கால் ஊடாக மக்கள் நடமாடும் இடத்திற்கு விழுந்த நிலையிலேயே வருகை தந்தது.
இதேவேளை குறித்த யானைக்கு உணவுக்காக கரும்பு,பப்பாளி, அன்னாசி, மற்றும் யானை உண்ணக்கூடிய உணவுப்பண்டங்களை அப்பகுதியில் உள்ள மக்கள் கொடுத்து வந்தனர்.
வனஜீவராசிகள் திணைக்களம் கடந்த 7ஆம் திகதி முதல் சிகிச்சை அளித்து வருவதாக கூறி இருந்தபோதிலும் சம்பவ இடத்திற்கு கடந்த இரண்டு மூன்று நாட்களாக சென்ற போதிலும் எவ்வித சிகிச்சையும் அளிக்கவில்லை எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் குறிப்பிட்டனர்.
ஆனாலும் குறித்து யானையை பார்ப்பதற்காக வைத்தியக்
குழுவொன்று வருகை தருவதாக கூறியிருந்த போதிலும் இன்று வெள்ளிக்கிழமை மாலை வரை எவரும் வருகை தரவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த 7ஆம் தேதி முதல் ஒரே பக்கமாக உறங்கிக் கொண்டிருக்கின்ற யானையின் கால் ஒன்று உடைந்து இருக்கின்ற போதிலும் இடுப்பு உடைந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும் இடுப்பு பகுதியில் எவ்வித வீக்கம் இல்லை எனவும் ஒரே பக்கமாக யானை விழுந்து கிடப்பதால் யானையின் கண் , ஆணுறுப்பு மற்றும் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கு மிக விரைவாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.