மரக்கறி செய்கையாளர்களுக்கும் நட்டஈடு வழங்குமாறு கோரிக்கை

இலங்கை மரக்கறி செய்கையாளர்களுக்கும் நட்டஈடு வழங்குமாறு கோரிக்கை.
நெல் விவசாயிகளுக்கு மாத்திரமன்றி மரக்கறி செய்கையாளர்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மரக்கறிகளை பயிரிடும் விவசாயிகள் விளைச்சல் குறைவினால் பல பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், அவர்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மரக்கறி விவசாயிகள் அதிக செலவில் மரக்கறிகளை பயிரிட்ட போதிலும் குறைவான விளைச்சலையே பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மரக்கறிகளின் விலையை அதிகரித்து விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நெற்செய்கையாளர்களுக்கு வழங்குவது போன்று மரக்கறி விவசாயிகளுக்கும் நட்டஈடு வழங்கப்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பயிர்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய்ந்து, நியாயமான பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள் மற்றும் உயர் தொழினுட்ப விவசாய ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார சபையில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.