பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் எரிவாயு வினியோகம்
பாறுக் ஷிஹான்
நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு சீராக வழங்கப்பட்டு வருகின்றது.
இருந்த போதிலும், இன்று இம்மாவட்டத்திலுள்ள நற்பிட்டிமுனை லிட்ரோ எரிவாயு விநியோக மொத்த விற்பனை நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட சுமார் 1000 க்கும் அதிகமான சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டு வருகின்றன.
குறித்த மொத்த விற்பனை நிலையத்தில் எரிவாயுக் கொள்வனவு செய்ய வருகை தந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதையடுத்து எரிவாயு நிறுவன அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திலிருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த எரிவாயு சிலிண்டர்கள் தற்போது நாட்டிலுள்ள களஞ்சிய சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்ற நிலையில், எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக தகவல் பரவியதையடுத்து பொது மக்கள் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு அதிகாலையிலிருந்தே காத்திருந்து எரிவாயு கிடைக்காமை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
எனினும், எரிவாயுக்களஞ்சிய பகுதியில் அமைதியின்மை சீர்செய்யப்பட்டு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் லிட்ரோ எரிவாயுக்கட்டம் கட்டமாக வழங்கப்பட்டது.
இந்த எரிவாயுக்கொள்வனவில் சிறுவர்கள் பெண்கள் அதிகளவாக வருகை தந்து பெற்றிச்சென்றதைக்காண முடிந்தது.
மேலும், எரிவாயுவைக் கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு அது கிடைக்காமையால் அமைதியின்மையில் ஈடுப்பட்டுள்ளனர்.
எனினும், கல்முனை பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.