திருமலை மூதூர் ஊடகவியலாளர் மீது தாக்குதல் : ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதி - திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் கடும் கண்டனம்...
ரவ்பீக் பாயிஸ்
திருக்கோணமலை மூதூர் பிரதேச சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் காடையர்களினால் தாக்கப்பட்டமைக்கு திருகோணமலை ஊடகவியலாளர் சங்கம் தமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மூதூர் பிரதேச சுயாதீன ஊடகவியலாளர் மொஹமட் புஹாரி நேற்று (21) மாலை மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக ஒரு காடையர் குழுவினரால் தாக்கப்பட்டதில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...
மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி செய்தி சேகரிக்கச் சென்ற குறித்த ஊடகவியலாளர் மீது காடையர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டதாக தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் புஹாரி தெரிவித்தார்.
மேலும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட குறித்த ஊடகவியலாளரின் கையடக்கத் தொலைபேசியை ஆறு பேர் கொண்ட குறித்த காடையர் குழுவினால் பறிக்கப்பட்டதாகவும் அவரது மோட்டார் சைக்கிளின் ஹெல்மெட்டும் இதன்போது பறித்துச் சென்றதாகவும் குறித்த ஊடகவியலாளரினால் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் சம்பவத்தினத்திலேயே ஊடகவியலாளரிடம் கைத்தொலைபேசி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாட்டில் துணிச்சலுடன் பக்கச்சார்பின்றி நடுநிலையாக செயற்பட்டு வரும் இவ்வாறான ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் நாட்டின் ஊடக சுதந்திரத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் செயல் எனவும்
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வருவதை வன்மையாக கண்டிப்பதாகவும் மூதூர் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய காடையர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள்விடுப்பதுடன் தமது கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
மேலும் தாக்குதலுக்குள்ளான குறித்த ஊடகவியலாளர் தொடர்ந்தும் மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
