கிழக்கின் முதலாவது டிஜிட்டல் மையம் திருமலையில் திறந்து வைப்பு...
திருமலை ரவ்பீக் பாயிஸ்
கிழக்கு மாகாணன் முதலாவது டிஜிட்டல் மையம் திருகோணமலையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் உப அலுவலகம் மற்றும் மற்றும் டிஜிட்டல் மையம் என்பன மக்கள் சேவைக்காக திருகோணமலை சிங்கபுரவில் திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
மக்களின் நீண்டகால தேவையாக இவ்வலுவலகம் வேண்டப்பட்டது. குறிப்பாக முத்துநகர் உள்ளிட்ட தூரப்பிரதேசங்களில் உள்ள சேவை பெறுநர்கள் இதுவரை காலமும் பிரதேச சபையின் சேவைகளை பெறுவதற்காக அதிக பணத்தையும் நேரத்தையும் செலவழித்து செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. தற்போது இவ்வலுவலகம் ஏற்படுத்தப்பட்டமை மூலம் மக்கள் தமது சேவைகளை குறுகிய நேரத்தில் சிரமமின்றி இவ்வலுகத்தில் பெறக்கூடியதாக அமைந்துள்ளது.
மேலும் இக்கட்டிடத்தொகுதியில் டிஜிட்டல் மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலத்திரனியல் புத்தகசாலை, அரச நிறுவனங்களின் இலத்திரனியல் சேவைகளை பெறல், தகவல் தொழிநுட்ப அறிவு சார் விடயங்களை அனுகல் உட்பட்ட விடயங்களை கட்டணமின்றி பெறக்கூடியதாக அமையும். இந்நிலையத்தின் சேவைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பெறக்கூடியதாக அமையும்.
டிஜிட்டல் மையத்திற்கான உபகரணங்கள் ஆசிய மன்றத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் மையத்தின் அடுத்த நிலையம் மகா ஓயாவில் வெகுவிரைவில் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



