மாவட்டம் மாறுவதற்கான அனுமதி கிடையவே கிடையாது !!

மாவட்டம் மாறுவதற்கான அனுமதி கிடையவே கிடையாது
ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு எந்தவொரு காரணம் கொண்டும் அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்திய தினத்திலிருந்து இதுவரை சட்டத்தை மீறியவர்கள் 7000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 1700 வாகனங்கள் பொலிசார் கையகப்படுத்தியுள்ளனர்.
ஆரம்பத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டது. தற்போது பொலிஸ் பிணை வழங்கப்படுவதில்லை, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதுடன் அவர்கள் பயணித்த வாகனம் பொலிஸ் கையகப்படுத்தி நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்படும்.
ஆரம்பத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டது. தற்போது பொலிஸ் பிணை வழங்கப்படுவதில்லை, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதுடன் அவர்கள் பயணித்த வாகனம் பொலிஸ் கையகப்படுத்தி நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்படும்.
அதுபோலவே, அத்தியாவசிய சேவைகள் மற்றும் அத்தியாவசிய மனிதாபிமான தேவைகளைத் தவிர எந்தவொரு காரணத்திற்கும் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது. எந்தவொரு காரணத்தாலும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது.
அத்தியாவசிய விடயங்களுக்காக அனுமதிப்பத்திரம் வழங்குவதாயின் பிராந்திய சுகாதார மருத்துவர் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் பரிந்துரையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் எந்தவொரு காரணத்திற்கும் நீங்கள் வசிக்கும் பிரதேசத்தை விட்டு வெளியே செல்வதற்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது. மிக முக்கிய காரணமாக இருந்தால் சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரை அவசியமாகும். அத்தியாவசிய சேவைகளாக சுகாதாரப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பணியாளர்கள் கருதப்படுவர்.
ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காகப் பொலிஸ் நிலையங்களால் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை அவர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளை அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.