Header Ads

Breaking News
recent

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

ஒன்றுகூடி புத்தாண்டைக் கொண்டாடும் வாய்ப்பு  எமக்கு இம்முறை கிடைக்காத போதும் - நாட்டின் நெருக்கடியை ஒன்றினைந்த அர்பணிப்போடு எதிர்த்துநிற்கும் மக்களுக்கு - எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!கெளரவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ.

எமது தேசத்தின் கலாசாரத் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் மிகவும் சிறப்புவாய்ந்த தேசிய பண்பாட்டு விழாவான தமிழ் - சிங்கள புத்தாண்டு மலர்கின்ற இவ்வேளையில், இந்த புது ஆண்டு இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.

சூரியன் மேஷத்தில் பிரவேசிப்பதுடன் மலரும் புத்தாண்டு மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் பரஸ்பர உறவுகளை வளர்த்துக்கொள்வதற்குமான தருணமாகும்.

இருந்தபோதும், எதிர்பாராதவிதமாக - உலகெங்கிலும் தாக்கிவரும் நோய்க்கிருமித் தொற்று எமது நாட்டிலும் பரவிவருவதன் காரணமாக - எமது முன்னோர்கள் காலத்தில் கூட கேள்விப்பட்டிராத அனர்த்தங்களுக்கு நாம் முகம்கொடுத்தபடி உள்ளோம்.

எனவே, மனிதர்கள் தமக்கிடையே இடைவெளியைப் பேனவேண்டியதன் அவசியத்தைச் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியிருப்பதால் - இந்த தடவை, நாம் கூட்டாக ஒன்றினைந்து புத்தாண்டுப் பண்டிகையைக் கொண்டாடும் வாய்ப்பு எமக்கு இல்லை.

நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படும் எந்தவொரு நெருக்கடியையும் எதிர்கொள்வதற்குத் தன்னார்வமாக ஒன்றுபடும் எமது மக்கள் - இந்த பண்டிகை காலத்திலும் சமூக இடைவெளியைத் தமக்குள் பேணி, நோய்த்தொற்றுப் பரவுவதைத் தவிர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.

இயற்கையின் அழகினால் வளம்பெறும் புத்தாண்டுப் பண்டிகை, இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் மனிதன் நன்றி தெரிவிக்கும் ஒரு பண்டிகையாகும். இயற்கையுடன் ஒன்றித்து வாழ வேண்டிய தேவை மிகவும் உணரப்படும் ஒரு யுகத்திலேயே நாம் இப்போது இருக்கின்றோம்.

பல்லாண்டுகாலமாக நாம் மிகுந்த கௌரவத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொண்டு வரும் புத்தாண்டு நிகழ்வுச் சம்பிரதாயங்களை - குறிப்பாக, சுபவேளையில் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து அடுப்பு மூட்டுதல், பால் பொங்கல் பொங்கவைத்தல், உணவு பரிமாறுதல் மற்றும் சம்பிரதாயபூர்வமாக கொடுக்கல் வாங்கல்களைத் தொடங்குதல் போன்றவற்றை இந்த முறை குடும்பத்தினருடன் மட்டும் சேர்ந்து மேற்கொள்வதே எமக்குப் பொருத்தமானதாக இருக்கின்றது.

புத்தாண்டின் மகிழ்ச்சிக்கு உண்மையான சொந்தக்காரர்கள் எமது சிறு பிள்ளைகளே ஆவர். இம்முறை புத்தாண்டுப் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் போதும், சிறு பிள்ளைகள் புத்தாண்டு மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

எனவே நீங்கள் வீடுகளில் இருந்தவாறு புத்தாண்டுச் சம்பிரதாயங்களை மேற்கொண்டு - புத்தாண்டின் மகிமையை உணர்ந்துகொள்ள பிள்ளைகளுக்கு வாய்ப்பளியுங்கள் என நான் அன்புடன் உங்களிடம் வேண்டுகின்றேன்.

நாடும் மக்களும் எதிர்கொண்டுள்ள இந்த நோய்த்தொற்றுப் பிரச்சினையை உறுதியுடன் கைகோர்த்துநின்று நாம் வெற்றிகொள்ள வேண்டும் என்பதனையும் - எமது புத்தாண்டுப் பிரார்த்தனைகளுள் முதன்மையானதாக நாம் சேர்த்துக்கொள்வோம்.

அனைத்து தமிழ் - சிங்கள மக்களுக்கும் மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கோட்டாபய ராஜபக்க்ஷ
2020.
Powered by Blogger.