வாடகை வீட்டில் வசித்துவரும் வைத்தியர்களும், தாதியர்களும் அவதி
(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் வைத்தியர்களும், தாதியர்களும் தங்குவதற்கு இடமின்றி அவதியுற்று வருவதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக திருகோணமலை நகர்ப்பகுதிகளில் வாடகை வீடுகளில் வசித்து வந்த வைத்தியர்களையும், தாதியர்களையும் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் அதிகளவிலான தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்து திருகோணமலை மாவட்ட மக்களின் நோய்களை குணமாக்கும் நோக்கிலேயே செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று இதுவரைக்கும் இனம் காணப்படாத நிலையில் மனிதாபிமானமற்ற முறையில் தமது வீடுகளில் தங்கியிருந்த தாதியர்களையும், வைத்தியர்களையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுவது , கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வைத்தியசாலையில் கடமை யாற்றி விட்டு தங்களது வாடகை வீட்டுக்கு செல்லும்போது தொற்று நீக்கம் செய்த பின்னரே அவர்கள் வீடுகளுக்குச் செல்கின்றனர்.
ஆனாலும் தற்போதைய நிலையில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு வீட்டிலிருந்து எழும்புமாறு கூறுவது எமது மக்களின் நோய்களை இன்னும் அதிகரிப்பதற்கு நாங்கள் செய்யும் அநியாயகரமான செயல் எனவும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்து கடமை புரிகின்ற தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உடனடியாக அரசாங்கம் மாற்று வழிகளை கையாண்டு நோயாளர்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
அத்துடன் வைத்தியசாலை ஊழியர்கள் தமது உயிர்களை தியாகம் செய்து நோயாளர்கள் விடையத்தில் அக்கறையாக செயற்பட்டு வரும் பட்சத்தில் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் நபர்கள் சற்று சிந்தித்து செயற்படவேண்டும் எனவும் திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.