Header Ads

Breaking News
recent

சிவில் உடையில் பொலிசார் : சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களை கைது செய்ய நடவடிக்கை!!

இன்றிலிருந்து நாடுமுழுவதிலும் ஊரடங்கு சட்டம் பகல் வேளையில் தளர்த்தப்படுகிறது.

இக்காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத போதிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நாட்டு மக்களுக்கு அறிவித்தார் .

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் அத்தியாவசிய தேவைகளுக்கும் நிறுவனங்களில் கடமையாற்றுவோர் தவிர்ந்த ஏனையோர் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

2 மாதங்களுக்கு மேலதிகமாக ஊரடங்கு சட்டத்திற்குட்பட்டிருந்த மக்கள் அதற்கு முன்னர் எவ்வாறு செயற்பட்டிருந்தார்களோ தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பிற்கு மத்தியில் அவ்வாறு செயற்பட கூடாதென்றும் அவர் அறிவுறுத்தினார்.

ஊரடங்கு சட்டத்தைப் போன்று கொரோனா தொற்று தடுப்பு சட்ட விதிகளுக்கு அமைவாக சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டவகையில் சமூக விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரமுண்டு.

குற்றவியல் சட்டத்திற்கு சமமான வகையில் இந்த சட்ட விதிகளும் அமைந்திருப்பதாக தெரிவித்த அவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சமூக இடைவெளியை பேணாதவர்களுக்கு எதிராக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

சிவில் உடையில் பொலிஸாரை கடமையில் நாம் இதற்காக ஈடுபடுத்தவுள்ளோம். சமூக இடைவெளியை கடைபிடிக்காதவரை கைது செய்வதற்காக இந்த நடவடிக்கை சிவில் உடையிலுள்ள பொலிஸார் இவர்களை அடையாளங் காணும் பொழுது அந்த இடத்திற்கு பொலிஸார் விரைவார்கள்.

காணொளி போன்ற நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இவ்வாறானோரை அடையாளங் காண்பதற்கும் நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்


உடல் பயிற்சி நிலையங்கள், ஸ்பா மற்றும் திரையரங்குகளை மீளத்திறக்க அனுமதிவழங்கப்படவில்லை. சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களில் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் கூறினார்.

அனைவரும் முகக்கவசம் அணிவது முக்கியமானதாகும். நுகர்வோர் நிறுவனங்களில் கடந்த காலங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. நாம் கவனத்தில் கொண்டோம். தொடர்ந்தும் நிறுவனங்கள் இவ்வாறு செயற்படுமாயின் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.