நாட்டில் கொரோனா தொற்று – தற்போதைய நிலவரம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களில் மூவர் ஓமான் நாட்டில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நால்வர் சேனபுர புனர்வாழ்வு மையத்தில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய நால்வர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 800 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 7 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 988 ஆக காணப்படுகின்றது.
அத்துடன், 120 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 658 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, ஹோமாகம பகுதியில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, தனிமைப்படுத்தப் பட்டவர்களில் வைத்தியர் மற்றும் மருத்துவ நிலையமொன்றின் உரிமையாளர் ஒருவரும் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் தமது நிறுவனத்தின் கிளைக்கு வந்திருந்ததையடுத்து குறித்த கிளை மூடப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட ஒருவரை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து கொழும்பு இரண்டில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்தின் கிளை சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தமது கிளையினை மூடுவதாக குறித்த தொலைத் தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
