யாழ் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும், சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பட்டார்.
மேலும், குறித்த உத்தியோகத்தரின் மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான உத்தியோகத்தர் வழமை போன்று இன்றைய தினம் காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் கையில் வாள் வெட்டுக்கு இலக்கான உத்தியோகத்தர் பாதுகாப்புக்காக மாவட்ட செயலகத்திற்குள் சென்ற நிலையில், அவரை பின் தொடர்ந்த தாக்குதல் தாரிகள் சரமாறியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண பொலிஸார், மாவட்ட செயலக கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.