Header Ads

Breaking News
recent

இலங்கையில் பேஸ்புக் பயனாளர்களுக்கு புதிய நடைமுறைகள்!


இலங்கையில் பேஸ்புக் பயனாளர்களால் பகிரப்படும் தவறான மற்றும் போலியான தகவல்கள் தொடர்பில் கடுமையான நடைமுறைகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகள் மற்றும் விதிமுறைகளை மீறிய பதிவுகளைக் கண்டறிவதற்காக, பேஸ்புக்கின் இலங்கைக் குழுவினால் தன்னியக்க முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கையின் பிரபல ஆங்கில நாளிதழொன்று தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பின்னர் இதற்கான கட்டமைப்பு மாற்றங்களை பேஸ்புக் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஒரு பதிவை மறுபகிர்வு செய்யக்கூடிய தடவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பயனர்களின் முறைப்பாடுகள் மற்றும் தன்னியக்க தொழிநுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில், வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட மொழிகளைக் கையாளும் வகையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளை மறு பரிசீலனை செய்யும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அதிகாரிகள் உள்ளடங்கலாக, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேஸ்புக்கின் பாதுகாப்பு தொடர்பில் பணிகளை முன்னெடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளைக் கையாளக்கூடிய பதிவுகளை மறு பரிசீலனை செய்யும் அதிகாரிகள் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைக்காலத்தில் கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை நீக்குவதிலும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்ததாக பேஸ்புக் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.