அமைச்சரின் வீட்டுக்கு மட்டும்தான் இயங்குமா? மலையகத்தில் சுப்பையா கமலதாசன் குமுறல்
மலையகத்தில் மலையக மக்கள் வாழும் குடியிருப்புகள் தீ விபத்துக்குள்ளாவது அடிக்கடி நடந்தேறி வருகின்றன. இதற்கு மின் ஒழுக்குகளில் ஏற்படும் சீர்கேடுகள், மக்களின் கவனயீனம் என்பன ஏதுவாக அமைகின்றன. தனி வீட்டு திட்டமே இதற்கான நிரந்த தீர்வாகும். இதனையே முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் முன்னெடுத்தார்.
ஆனாலும் தீ விபத்து ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் அரச நிறுவனங்களும், உள்ளூராட்சி மன்றங்களும் பாராமுகமாக செயற்படுவது கவலையளிக்கின்றது.
நேற்றைய தினம் முன்னாள் அமைச்சரின் பூர்வீக வீடு தீ பற்றியதும் நுவரெலியாவியிருந்து 34 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வேவண்டன் தோட்டத்திற்கு தீயணைப்பு படைகள் வருவிக்கப்பட்டுள்ளது.
என பழனி திகாம்பரத்தின் பிரத்தியேக செயலாளரும், லெட்சுமி கீழ வட்டார அமைப்பாளருமான சுப்பையா கமலதாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தீயணைப்பு படையும் தீயணைப்பு இயந்திரங்களும் அமைச்சரின் வீட்டுக்கு மட்டும்தான் இயங்குமா? என கேள்வி எழுப்பியுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,
தோட்டங்களுக்கு தீயணைப்பு படைகள் சேவையாற்ற முடியாதென்றால் 18/7 அன்று மட்டும் எவ்வாறு சேவையாற்ற முடியும். எமது கருத்து நேற்று தீயணைப்பு படைகள் வருவிக்கப்பட்டது பிழையென்பதல்ல.
மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் இந்த சேவை பெற்று கொடுக்கப்பட வேண்டும்.
இதனை உள்ளூராட்சி மன்றங்களே செய்ய வேண்டும்.
தோட்டபுறங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு சேவையாற்ற முடியாதென்ற 33 வது சரத்து திருத்தப்பட்டுள்ளது.
எனவே பிரதேச சபைகளினூடாக இந்த தீயணைப்பு சேவைகளை பெருந்தோட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எந்த தடையும் இல்லை.
நுவரெலியா மாவட்டத்தில் அதிக உள்ளூராட்சி சபைகளை தன் வசம் வைத்திருக்கின்ற இ தொ கா முச்சக்கர வண்டி, வேன் போன்ற வாகனங்களுக்கு அனுமதி வழங்குவது மட்டுமே தன்னுடைய சேவையென நினைத்துக்கொண்டு அதனை வைத்து அரசியல் செய்கின்றது. தீயணைப்பு சேவையினை பெற்றுக்கொடுக்க வேண்டியதும் உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பே.
இனி வரும் காலங்களிலாவது அமைச்சரின் வீட்டுக்கு மட்டும் சேவையாற்றுகின்ற தீயணைப்பு சேவை பெருந்தோட்ட மக்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும். இவ்வளவு காலமும் பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புகள் தீ விபத்தில் சிக்குண்டால் எல்லா உடமைகளும் இழந்த பின் அனுதாபம் தெரிவிக்கும் நிலையே காணப்படுகின்றது.
தீயணைப்பு சேவையினை பெற்றுக்கொடுப்பதோடு அது தொடர்பான விழிப்புணர்வும் மக்களுக்கு வழங்குகின்ற பட்சத்தில் பெருந்தோட்ட மக்களின் உடமைகள் இழப்பினை குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


