Header Ads

Breaking News
recent

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது டெங்கு காய்ச்சல் : இது வரை பாதிக்கப்பட்டோர் 10 ஆக உயர்வு

 மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து வருவதாக வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.


அந்தவகையில் கடந்த ஆகஸ்ட் 22 ஆந் திகதி தொடக்கம் 28 ஆந் திகதி வரையும் 10 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 5 நோயாளர்களும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 03 டெங்கு நோயாளர்களும், செங்கலடி மற்றும் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் தலா ஒரு நோயாளர்களுமாக மொத்தம் 10 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ளனர்.


இருப்பினும் வாகரை, வாளைச்சேனை, ஏறாவூர், மட்டக்களப்பு, வவுனதீவு, காத்தான்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, கோரளைப் பற்று மத்தி மற்றும் கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மேலும் கடந்த சில மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென வைத்தியர் வே. குணராஜசேகரம் தெரிவித்தார்,

மொத்தமாக கடந்தவாரம் 10 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டார்.


இதுதவிர இம்மாவட்டத்தில் 2020 ஜனவரி தொடக்கம் இதுவரை 2203 டெங்கு நோயர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதுடன் 2 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை ஆரையம்பதி மற்றும் ஓட்டமாவடி பிரதேச மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் நீர் தேங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே. குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Powered by Blogger.