வவுனியா வைத்திசாலையில் மூன்று பிள்ளைகளின் தந்தை மரணித்தமைக்கான காரணம் வெளியானது
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்த நிலையில் அவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மகாறம்பைக்குளம் – புளியடிபகுதியை சேர்ந்த குறித்த கு டும்பஸ்தர் கடந்த மூன்று நாட்களிற்கு முன்பாக நாய் கடிக்கு இலக்காகியுள்ள நிலையில் அதற்கான தடுப்பூ சியை போடுவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு நேற்றையதினம் அவர் சென்றுள்ளார்.
அவருக்கு நாய் கடித்ததற்கான தடுப்பூசி நேற்று காலை போடப்பட்ட நிலையில் அதன் பின்னர் வீட்டிற்கு சென்ற அவருக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு தவறுதலான த டுப்பூசியை ஏற்றியமையாலேயே மரணம் ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் உயிரிழந்தவரின் மனைவியிடம் வாக்கு மூலத்தினை பதிவு செய்திருந்தார்.
அவரது வாக்குமூலத்தில், தவறான தடுப்பூசியினை செலுத்தியமையாலேயே தனது கணவர் மரணமடைந்ததாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தனது வாக்கு மூலத்தினை பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் உத்தரவிட்டிருந்தார். சடலம் உடற்கூற்று பரிசோ தனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதன் அறிக்கையின் பிரகாரம் குறித்த குடும்பஸ்தரது மரணம் மாரடைப்பினால் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் புளியடி பகுதியை சேர்ந்த சிவபாலன் (வயது 49) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
