தீப்பற்றியுள்ள பானாமா கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர் காயங்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதி!!!!
தீப்பற்றி எரியும் கப்பலிலிருந்து காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (3) மாலை 5 மணியளவில் கல்முனை வாடி வீட்டு ஆழ்கடல் பகுதியிலிருந்து கடற்படையினரின் தாக்குதல் படகொன்றினூடாக தீப்பற்றிய கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர் பின்னர் டோலர் படகில் கடற்கரைப்பகுதிக்கு கடற்படையினரால் அழைத்து வரப்பட்டார்.
இவ்வாறு அழைத்து வரப்பட்ட நபர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில், கதறியதை அவதானிக்க முடிந்ததுடன், கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் குறித்த நபரை பாதுகாப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 1990 அவசர அம்புலன்ஸ் சேவையூடாக அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும், மீட்கப்பட்ட நபர் சுமார் 57 வயது மதிக்கத்தக்க நபர் எனவும், எல்மோர் என்ற பெயரை உடைய பிலிப்பைன்ஸ் நாட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
தீப்பற்றி எரிந்துக் கொண்டுள்ள கப்பலிலிருந்து காயமடைந்த நிலையில் மாலுமி ஒருவர் உட்பட 18 ஊழியர்கள் வேறொரு கப்பல் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
சங்கமன்கந்தை கடற்பரப்பிலிருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பலொன்றில் இன்று காலை 7.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
பனாமா அரசுக்குச்சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பலே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

