அமைச்சுக்களை அதிகரிக்க முயற்சி : அநுரகுமார குற்றச்சாட்டு!
20 ஆவது திருத்தத்தில் அமைச்சுக்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டாலும், தேசிய அரசாங்கம் என்ற ரீதியில், அமைச்சுக்களை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான திருத்தப்பட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுயாதீன தன்மை இல்லாத சந்தர்ப்பத்தில் கணக்காய்வாளர் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
ஆகவே கணக்காய்வாளர் திணைக்களத்தின் சுயாதீன தன்மையை பாதுகாப்பதற்காகவே ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அடுத்ததாக அமைச்சரவை அமைச்சுக்களை மட்டுப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதிலே தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைத்து அமைச்சுக்களை அதிகரிக்க முடியும். அதற்காக பொதுஜன பெரமுன பிள்ளையானின் கட்சி மற்றும் அத்தாவுல்லாவின் கட்சிகளை இணைத்து தேசிய அரசாங்கத்தை அமைப்பீர்கள்.
இதிலே புதிதாக இணைந்து செயற்படக் கூடியவர்கள் மூன்று பேர் மாத்திரமே. ஆகவே 3 அமைச்சுகளை கொடுக்க முடியும். இரட்டை பிரஜா உரிமையை இல்லாது செய்ய வேண்டுமெனவே நாம் குறிப்பிடுகின்றோம்.
இவ்வாறு இல்லாவிட்டால் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கோ மாகாண சபைக்கோ அல்லது ஜனாதிபதி தேர்தலிலோ போட்டியிட முடியாதென சட்டம் கொண்டுவருவதோடு, அதிலே பசில் ராஜபக்ஸவுக்கு அது பொருத்தப்படாதென குறிப்பிட்டுக்கொள்ள முடியும்” என அநுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
