பசில் ராஜபக்ஸவிற்கு விதிக்கப்பட வெளிநாட்டு தடை நீக்கம்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயண தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நீக்கியுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2,991 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை உள்ளிட்ட 05 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதலாவது பிரதிவாதியாக பசில் ராஜபக்ஸ பெயரிடப்பட்டுள்ளார்.
அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்ட போது, 3 மாதங்களுக்கு ஒரு தடவை குற்றப்புலனாய்வில் ஆஜராக வேண்டும் என விதிக்கப்பட்ட பிணை நிபந்தனையையும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க இன்று நீக்கியுள்ளார்.
பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதால் அவர்களை விசாரணைகளின்றி விடுவித்து விடுவிக்குமாறு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி காமினி மாரப்பன உள்ளிட்ட சட்டத்தரணிகள் மேல் நீதிமன்றத்தில் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வழக்கு நாளை மறுதினம் வரை ஒத்துவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க, அதன் முன்னாள் பிரதி பணிப்பாளர் நாயகம் கே.ஏ. திலக்கசிறி ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
