நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் சிலர் கைது!!!!
நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நெடுந்தீவு கடற் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்மூலம், 3 இந்திய மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மன்னார் வடக்கு கடல் பிரதேசம் மற்றும் குதிரைமலை முனையின் மேற்கு கடல் பிரதேசத்திலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்மூலம், 2 இந்திய மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் மற்றும் கடலோர காவல் படையினர் ஆகியோர் இணைந்து நேற்றைய தினம் இரவு முதல் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த தேடுதல் நடவடிக்கைகளின்போது, கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான வழிகாட்டல்கள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட 36 இந்திய மீனவர்களையும், தற்காலிக முகாம்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுரு சூரியபண்டார எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார்.
அத்துடன், நாட்டின் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், இது போன்ற தேடுதல் நடவடிக்கைகளை கடற்படை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும், கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


