மருதூர் ஏ.மஜீதின் இழப்பு கவலையளிக்கிறது - முன்னாள் இராஜாங்க அமைச்சர்
எம்.எஸ்.எம்.றிஸ்மின்
அனுபவமும் ஆழ்ந்த அறிவும் கொண்ட மருதூர் ஏ.மஜீத் அவர்களின் இழப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீதின் மறைவையொட்டி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மருதூர் ஏ.மஜீத் கல்வி, கலை, இலக்கியத் துறையில் பல்கலை விற்பன்னராகத் திகழ்ந்ததுடன், எனக்கு மிகவும் பிரியமான ஒரு பேச்சாளராகவும் திகழ்ந்தார்.
அவர் எவ்வளவு நேரம் பேசினாலும் எவ்வளவு நேரம் அவருடன் உரையாடினாலும் சலிப்பு ஏற்படாது. அப்படிப்பட்டயொரு திறமைமிக்கவரை நாம் இழந்தமை பெருந்துயராகும்.
சகலருடனும் நல்லுறவைப்பேணிய ஒரு நல்ல மனிதர் என்பதுடன், தகுதி, தராதரம் பார்க்காமல் சகலருடனும் பழகி வந்தார். நல்ல ஆலோசனைகளை வழங்கும் பண்புள்ளவர். சந்திக்கச்செல்லும் யாராக இருந்தாலும் நேரத்தைக்கேட்டு அனுமதி பெற்று வருவது அவரது வழக்கமாக இருந்தது.
கல்வித்துறையில் மட்டுமன்றி, இலக்கியத் துறையில் அவர் நீண்ட காலமாக இயங்கி வந்தார். நிறைய நூல்களை எழுதினார். இலக்கியக் கூட்டங்களில் அவரது உரையைக்கேட்பது வெகு சுவாரஸ்யமானது. அவரது எழுத்து அவருக்கு மிகப் பெரும் பிரபல்யத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தது.
இவ்வாறானதொரு நற்பண்புள்ள மரியாதைக்குரிய மனிதரை ஒரு நல்ல நட்புள்ளத்தை இழந்தது மிகவும் மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அன்னாரை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் என்னைப்போன்ற அன்னாரின் நட்புக்களுக்கும் கலை, இலக்கியத்துறையினருக்கும் இறைவன் மன அமைதியை வழங்கவும் இறைவன் அன்னாரைப் பொருந்திக் கொள்ளவும் பிரார்த்திக்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.
