அம்பாறை மாவட்டத்தில் மற்றுமொரு பிரதேசம் முடக்கம்!
அம்பாறை - மாளிகைக்காடு கிழக்கு பகுதி மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி ஜீவராணி சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் இன்று கொரோனா தொற்றாளர் அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் நடமாடியதையடுத்தே குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் குறித்த பிரதேசத்தில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி ஜீவராணி சிவசுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
வெளியிடங்களில் இருந்து மாளிகைக்காடு கிழக்கு பிரதேசத்திற்குள் எவரும் உட்பிரவேசிக்க வேண்டாமென காரைதீவு பிரதேசசபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகிய வேண்டுகோள் விடுத்துள்ளன.
மேலும் குறித்த பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்த காரணத்தால் இப்பிரதேசத்தில் சுகாதாரத் துறையினரால் இன்று காலை 100க்கும் மேற்பட்ட அன்ரிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி ஜீவராணி சிவசுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

