கேஸ் சிலிண்டர் வெடிப்பு. அதை எப்படி பாதுகாப்பாக கையாளுவது?....
வீட்டைப் பராமரிப்பது என்பது அவ்வளவு சுலபமான வேலை அல்ல. அது ஒரு கலை, ஆர்வம், மிகப்பெரிய பொறுப்பு. இப்படியாகத்தான் அனுதினமும் பெண்கள் தாங்கள் வாழும் இல்லங்களை தூய்மையாகவும் பாதுகாக்கவும் பராமரிக்கிறார்கள். என்ன தான் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் கூட நாம் தவறுதலாக கவனிக்காமல் விடும் சில விஷயங்கள் பின்னாளில் நமக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். அப்படிப்பட்ட ஒன்றுதான் இந்த கேஸ் சிலிண்டர் வெடிப்பு. அதை எப்படி பாதுகாப்பாக கையாளுவது அதை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
நவீன பொருளாதார வளர்ச்சியின் காரணமாக இன்றைய தலைமுறைகளின் வீடுகளில் இன்றியமையாத ஒன்றாக மாறிப் போய்விட்டது கேஸ் சிலிண்டர். ஆரம்ப காலங்களில் ஒவ்வொருவரது வீட்டிலும் விறகு அடுப்பு என்பது தான் பயன்பாட்டில் இருந்தது. ஆனால், இன்றெல்லாம் கால சூழ்நிலைகளின் மாற்றத்தால் அவற்றை நாம் பராமரிப்பதும், கையாளுவதும் நமது அவசர கால வாழ்க்கைக்கு உதவியாக இருக்காது என்பதால் கேஸ் சிலிண்டர்களே பெரும்பாலும் அனைவரது இல்லங்களிலும் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.
இந்தக் கேஸ் சிலிண்டர்கள் எத்துணை உதவிகரமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அதிகமாகவே ஆபத்தும் நிறைந்து இருக்கிறது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இன்று எல்லோரது இல்லங்களிலும் என்று கேஸ் சிலிண்டர் பயன்பாடு மிக அதிகப்படியாகவே இருக்கிறது. கேஸ் சிலிண்டர் இல்லாவிட்டால் எந்த வேலைகளையும் செய்ய முடியாது எனும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டும் விட்டார்கள்.
கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்தை ஏற்படுவது ஆங்காங்கே அனுதினமும் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கிறது. இப்படி வெடி விபத்து ஏற்படும் போதெல்லாம் துண்டுப்பிரசுரங்கள், மற்றும் அரசாங்கம் வலியுறுத்தும் சில விதிமுறைகளையும் நாம் கடைப்பிடிக்கிறோம். பிறகு அவை எல்லாம் மீண்டும் காற்றில் பறக்கும் காகிதமாய் மறந்து விட்டு நம் அன்றாட வேலைகளை கவனிக்கத் துவங்கி விடுகிறோம்.
சமையலறையில் அதிகம் மின்னனு சாமான்கள் இருக்கும் இடத்தில் சிலிண்டர்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் காரணம் உயர் மின்னழுத்தம் காரணமாக மின்சாரம் தடைபட்டு உயர் அழுத்தத்தில் மின்சாரம் பாயும் பொழுது வீட்டில் இருக்கும் கேஸ் கசிவு காரணமாக விபத்து ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
சிலிண்டர்களை பக்கவாட்டிலோ, அது மாடுலர் கிச்சன் என்ற வகையில் மரத்தாலான கப்போர்டுகளுக்குள்ளோ வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை கேஸ் கசிவு ஏற்பட்டாலும் கூட அதன் வாசனை வெளியே தெரியாது. அடுப்பு மேடை அமைந்திருக்கும் பகுதிக்கு அருகே காற்றோட்டமான ஜன்னல் இருப்பதை தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக அதிகப்படியான காற்று வீசத் துவங்கினால் அடுப்பு அணைந்து காற்றில் கேஸ் பரவ துவங்கிவிடும். இதன் காரணமாக வெடி விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
பால் மற்றும் எளிதில் பொங்கி வழியக் கூடிய பொருட்களை அடுப்பில் வைத்து விட்டு மறந்த வண்ணம் வெளியே சென்றுவிட வேண்டாம். இதன் காரணமாக அடுப்பு அணைந்து கேஸ் பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது.
எப்போதும் இரவு நேரங்களில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக சமையல் அறையில் உள்ள கேஸ் சிலிண்டர்களை ஆப் செய்து விட்டு உறங்கச் செல்லுங்கள். காலை எழுந்து வந்தவுடன் உங்கள் வீடுகளை சமையலை துவங்கும் முன்பு கேஸ் சிலிண்டர்களை ஆன் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதன் காரணமாக இரவு நேரங்களில் உயர் அழுத்தம் காரணமாக மின்சாரம் பரவத் துவங்கினாலும் கூட அது எந்த வகையிலும் கேஸ் சிலிண்டர்கள் இருக்கும் இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தாது.
பெரும்பாலும் நீங்கள் உபயோகிக்கும் கேஸ் ஒயர்களையோ, அடிக்கடி மாற்றம் செய்துவிடுங்கள். கேஸ் லைட்டர்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். சில சமயங்களில் லைட்டர்கள் அடைபட்டுக் கிடந்தால் சரியான நேரத்தில் தீப்பொறி வெளியேறாமல் தடைபடும். இதன் காரணமாக ஏற்கனவே வெளியேறிக் கொண்டிருக்கும் கேஸ் வாயுவின் மூலமாக நீங்கள் பற்ற வைக்கும் தீப்பொறியானது குபீரென்று உங்கள் மீதோ, உங்கள் ஆடைகள் மீதோ பட்டு தீக்காயங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கேஸ் பைப்களை மாற்றம் செய்து உபயோகப்படுத்துங்கள். வருடத்திற்கு ஒருமுறையாவது ரெகுலேட்டர்களையும் மாற்றம் செய்து விடுங்கள். மாதம் ஒருமுறையாவது அடுப்பை முறையாக சுத்தம் செய்து அதில் படிந்திருக்கும் எண்ணெய், மற்றும் கரைகளை நீக்கம் செய்து விடுங்கள்.
இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களை நீங்கள் பார்த்துப் பார்த்து பாதுகாப்பாக கையாளும் பட்சத்தில் இந்த கேஸ் சிலிண்டர் என்பது எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.
இருப்பினும் சின்னச் சின்ன விஷயங்களில்
நாம் கவனிக்காமல் செய்யும் தவறுகள் தான் பின்னாளில் மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். எல்லா நாட்களும் உங்களுக்கு இனிதான நாட்களாக அமைய வாழ்த்துக்கள்.
